சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘அரண்மனை 4’. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தை பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார், குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்வில் சுந்தர்.சி பேசியதாவது: அரண்மனை முதல் பாகம் பண்ணும்போது, இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கும் திட்டம் ஏதும் இல்லை. ‘அரண்மனை’ படம் என் வாழ்க்கையில், கேரியரில் முக்கியமான அங்கம். நல்ல ஐடியா கிடைத்தால் மட்டுமே அடுத்த பாகங்களை இயக்கி இருக்கிறேன். அரண்மனை 4 கூட அப்படித்தான்.

வேறொரு கதை விவாதத்தில் இருந்தபோது என், ‘கோ ரைட்டர்’ கீர்த்தி ஒரு விஷயம் சொன்னார். இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட மன்னர்கள், பல்வேறு பகுதிக்குப் படை எடுத்திருக்கிறார்கள். ஆனால், கிழக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா நதியை தாண்டி யாரும் போகவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் ஒன்று பேய் பயம். இன்னொன்று ‘பாக்’ என்ற கேரக்டர்.

இதுபற்றிய நாட்டுப்புறக் கதைகளை இப்போதும் அங்கு பேசுகிறார்கள். இதை நம் படத்தில் வைக்கலாமே என்று ஆரம்பித்ததுதான், ‘அரண்மனை 4’. இதுவரை வந்த அரண்மனை படங்களில் இருந்து, இந்தப் படத்தின் கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் பிரம்மாண்டமாக இருக்கும். இவ்வாறு சுந்தர் சி கூறினார். குஷ்பு, தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.