இந்தியா: தமிழ்நாடு

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு வாக்குக்கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி, கொடிமங்கலம், கீழமத்தூர், துவரிமான் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: விலைவாசி கூடிவிட்டது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. வீட்டு வரியையும் உயர்த்தி விட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்கு கேட்கும் போது, அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள், தற்போது தகுதியான மகளிருக்கு மட்டும் எனக் கூறி வாக்குறுதியை பொய்யாகி விட்டனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் கட்சிகள் நம்மை ஏமாற்றுகின்றன. ரூ.100 காஸ் மானியம் கொடுக்காதவர்கள் ரூ.500 மானியம் எப்படி கொடுப்பார்கள் என்று பேசினார்.

பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவை கொச்சைப் படுத்தி பேசிய அண்ணாமலை பின்னால் டி.டி.வி. தினகரன் ஏன் செல்கிறார். ஓபிஎஸ்-க்கு அவரது எண்ணம் போன்று பலாப்பழச் சின்னம் கிடைத்துள்ளது. அதிமுகவை அழிக்க நினைத்தவர் ஓபிஎஸ். தற்போது அவர் இருக்குமிடம் தெரியாமல் போயுள்ளார். டீ ஆத்துபவரை முதல்வராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அதிமுகவுக்கு எதிராக வேலை பார்ப்பவர்கள் தேர்தலுக்கு பின்பு காணாமல் போய்விடுவர் என்று கூறினார்.