ஆப்கானிஸ்தானில் முறைகேடான தொழிலில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் வைத்து கல்லால் அடித்து கொல்லும் தண்டனை முறையை தாலிபான் அரசு மீண்டும் அமுல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது, வேலைகளை இழந்து பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சத்தோடு மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் முறைகேடான தொடர்பில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனையை மீண்டும் கொண்டு வருவதாக தலிபான் அறிவித்திருப்பது உலகளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், தலிபான் தலைவர் ஹிபதுல்லாஹ் (Mullah Hibatullah Akhundzada) இஸ்லாமிய ஷரியா(Sharia) சட்டத்தை தங்கள் விளக்கப்படி கடைப்பிடிப்பதற்காக இந்த தண்டனையை மீண்டும் கொண்டு வருவதை ஆதரித்தார்.

மேற்கத்திய நாடுகளை குறித்து பேசிய அக்குண்ட்சாடா, பெண்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வது பெண்களின் உரிமைகளை மீறுவது என்று நீங்கள் கூறுகிறீர்கள், "விரைவில் நாங்கள் முறைகேடான உறவு குற்றத்திற்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவோம். பெண்களை பொதுவெளியில் சவுக்கால் அடிப்போம். கல்லால் எறிந்து பொதுவெளியில் கொலை செய்வோம்" என்றார்.