விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தையும் மீண்டும் ஆரம்பிக்க இசைவு தெரிவித்தார் கமல். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. மேலும் அந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக திரைத்துறையில் பலமாகவே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

இது இல்லாமல் ஹெச். வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கமல். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது என்னவென்றால் கமல் ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைவதுதான். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட், மெட்ராஸ் டாக்கீஸ். ராஜ்கமல் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் இண்ட்ரோ வீடியோ சமீபத்தில்தான் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. இந்த படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார். இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் அபிராமியும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அபிராமி ஏற்கனவே கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார். அதில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்தது. எனவே இந்தப் படத்தில் அவரும் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.