தமிழ் சினிமாவில் கைவசம் டஜன் கணக்கில் படங்களை வைத்து பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளில் இருந்தும் இவரை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் பாலிவுட் பாட்ஷாவுக்கு ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

அண்மை காலமாக விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் அவர் வில்லனாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்காக புதிய லுக் ஒன்றுக்கும் அவர் மாறியுள்ளார்.

சென்னை மைலாப்பூரில் இயக்குனர் அமீர் புதிய உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். இதனை திறந்து வைப்பதற்காக விஜய் சேதுபதி வருகை தந்திருந்தார். அப்போது மெல்லிய மீசை மற்றும் கண்ணாடி என முற்றிலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி இருந்தார். இந்த லுக் சார்லின் சாப்ளின் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் அவரின் இந்த புதிய கெட்டப் மிஷ்கின் படத்திற்கானது என்றும் கூறப்படுகிறது. 'பிசாசு 2' படத்திற்கு பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் மிஷ்கின். இந்நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.