நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனிடையே லியோவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜையை முடித்த கையோடு ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. அதன்படி முதலில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும் அதற்கு ராஜு சுந்தரம் கோரியோ கிராஃபி செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாடல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு வெளிநாட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த  திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி இப்போது படக்குழு தென் ஆப்பிரிக்கா சென்றிருக்கிறதாம். அங்கு சில காட்சிகளும், சண்டை காட்சிகளும் எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்ச் சௌதரி, லைலா, சினேகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 80ஸ் நாயகன் மைக் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.