சென்னை ஈசிஆரில் ஏஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி, அவரது கேரியரில் மிக மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாததால், ரசிகர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரக்தியோடு வெளியேறினர்.

அதேபோல், மைதானத்திற்கு உள்ளே சென்றவர்களுக்கும் உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் பார்க்கிங் வசதி இல்லாததால், ஈசிஆர் பகுதி முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளால் நொந்துபோன ரசிகர்கள், ஏஆர் ரஹ்மானை கடுமையாக வசைபாடிச் சென்றனர்.

வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றும் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் விரக்தியை சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். நிகழ்ச்சி பற்றியும், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் பற்றியும் செய்த விமர்சனங்கள் பேசு பொருளானது.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமக ஏ.ஆர்.ரகுமானை இணையதளத்தில் பலர் விமர்சித்து வரும் நிலையில் சினிமா பிரபலங்களான நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , நடிகர் சரத் குமார், குஷ்பு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“மறக்குமா நெஞ்சம்" மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது.  ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர்.அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்.

அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து “பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்”எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.

தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம். Spread positivity!! என பதிவிட்டுள்ளார்.