நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம் சிறப்பான வெற்றியை தந்தது. இந்த படத்தில் சந்திரமுகி அரண்மனையை முதல் முறையாக ரஜினி -வடிவேலு பார்க்க செல்லும் காமெடிக் காட்சிகள் சிறப்பாக அமைந்தன. இந்தக் காட்சியில் ஒற்றை ஆளாக அரண்மனைக்கு கோபால் என்பவர் பெயின்ட் அடித்து வருவதாக ரஜினியிடம் கூறுவார் வடிவேலு. அவர் பயப்படாத போது, நீ ஏன் பயப்படுகிறாய் என்று ரஜினி அவரிடம் கேட்பார். இந்தக் காட்சியில் அந்த பெயின்டர் கோபால் காட்டப்படாமலேயே அவரை வைத்து ரஜினி மற்றும் வடிவேலு இருவரின் பேச்சுக்கள் காணப்படும். இதேபோல வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த சொர்ணா கேரக்டரும் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். வரும் செப்டம்பர் 15ம் திகதி விநாயகர் சதுர்த்தியையொட்டி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது சந்திரமுகி 2. இந்தப் படத்தில் சந்திரமுகியாக கங்கணா ரனாவத் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷன்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த விழாவில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு மற்றும் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று படம் குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்துக் கொண்டனர். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் வடிவேலு, சந்திரமுகி 2 படத்தில் பெயின்டர் கோபாலு இடம்பெற்றுள்ளளதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதல் பாகத்தில் தன்னுடைய மனைவியாக வந்த சொர்ணா கேரக்டர் இந்தப் படத்தில் கிடையாது என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.