உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறி நியூசிலாந்திற்கு வர உக்ரேனியர்களுக்கு புதிய குடியிருப்புப் பாதையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் மற்றும் வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதா இன்று காலை சுமார் 1,510 சிறப்பு உக்ரைன் விசா வைத்திருப்பவர்களுக்கான இந்த புதிய பாதையை அறிவித்தனர்.

அவர்களில் 720 பேர் மார்ச் 15 2022 முதல் நியூசிலாந்திற்கு பயணம் செய்துள்ளனர். 340 பேர் தற்போது உக்ரைனில் உள்ளனர்.

இந்நிலையில் மார்ச் 15, 2024 க்கு முன் நியூசிலாந்திற்கு வரும் சிறப்பு உக்ரைன் விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த பாதை திறக்கப்படும்.

குடியேற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் குடிவரவு வீசா விண்ணப்பக் கட்டணமாக 1200 டொலர்கள் செலுத்த வேண்டும், இருப்பினும் குடியேற்றக் கட்டணம் வசூலிக்கப்படாது.

விண்ணப்பதாரர்கள் வரையறுக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை மட்டுமே வழங்குமாறு கேட்கப்படுவார்கள்.

அவர்கள் ஆங்கில மொழிப் பரீட்சைகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை அல்லது பொருத்தமான நிதிகளுக்கான அணுகலைப் பெற வேண்டிய அவசியமில்லை, மேலும் ஸ்பான்சர்ஷிப் தேவைகளும் இருக்காது.

சிறப்பு உக்ரைன் விசா மூலம், நியூசிலாந்தில் உறவினர்களைக் கொண்ட உக்ரைனியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

நியூசிலாந்தில் இருக்கும் சிறப்பு உக்ரைன் விசா வைத்திருப்பவர்கள், தற்போதுள்ள கொள்கையின் கீழ் தொடர்ந்து தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம், அவர்கள் இங்கு தங்கியிருக்க விரும்பும் வரை என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கூறினார்.

குடியிருப்பு வகைக்கான விண்ணப்பத் தகவல்களை வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MBIE) கிறிஸ்துமஸுக்கு முன் வெளியிட திட்டமிட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்