சிரியாவில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.


சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள சில பகுதிகளை துருக்கி ராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

 
கடந்த 2017-ம் ஆண்டு அல் பாப் மற்றும் ஆப்ரின் நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பயங்கரவாதிகளை விரட்டி விட்டு, அந்த நகரங்களை துருக்கி ராணுவம் கைப்பற்றியது.


அப்போது முதல் துருக்கி ராணுவத்திடம் இருந்து மீண்டும் அந்த நகரங்களை கைப்பற்றும் நோக்கில் பயங்கரவாதிகள் தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அல் பாப் நகரில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெடி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.


இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆப்ரின் நகரில் ஒரு பேக்கரிக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.