அமீரகத்தில் பள்ளிக் கூட மாணவர்களுக்கு தமிழ்மொழி கல்வி பயிற்சி அளிக்கும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கற்றல் கல்வி மேலாண்மை மையத்தின் தொடக்க விழா துபாய் பிட்ஸ் பிலானி கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி நடந்தது.

விழாவில் அமீரகத்தை சேர்ந்த அல் செரகல் குரூப் தலைவர் மஹர் அலி காபி,தொழிலதிபர் அலி சயீத் அலி புத்தவீல் அல் மத்ரூசி மற்றும் அன்வர் குழுமத்தின் நிறுவனர் அன்வர்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் தொடக்க விழாவுடன் பன்னாட்டுக் கருத்தரங்கம், கலைப் பண்பாட்டுத் திருவிழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவில் கற்றல் கல்வி மேலாண்மை மையம் சார்பில் செம்மொழி விருதாளர் முனைவர் கு.மோகனராசு தலைமை வகித்தார்.பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் நீதிபதி மு.புகழேந்தி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் வசந்தா பதிப்பகத்தின் இயக்குநர் முனைவர் மோ.பாட்டழகன் தலைமையில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

விழாவில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயம்,கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.கற்றல் கல்வி மேலாண்மை மைய தொடக்க விழாவை குறிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் கரும்பலகையில் முதல் உயிரெழுத்தான 'அ' வை எழுதி தொடங்கி வைத்தனர்.

விழா ஏற்பாடுகளை கற்றல் கல்வி மேலாண்மை மையத்தின் தலைவர் முனைவர் ஸ்ரீ ரோகிணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

செய்தியாளர்.
ஜீவிதா கோகுல்