ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண் குழந்தைகள் 2 வருடங்களுக்கு மேலாகவே பள்ளிக்கு போகாமல் இருக்கிறார்கள்.

ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூஙகா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இப்படி நாளுக்கு நாள் அட்டகாசங்கள் பெருகி வரும் சூழலில்தான் இப்போது ஒரு பகீர் சம்பவம் நடந்து உலக நாடுகளையே உறைய வைத்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தில் சங்சரக் மாவட்டத்தில், 1ம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகள் 2 செயல்பட்டு வருகின்றன.

இந்த 2 பள்ளிகளிலுமே நிறைய பிள்ளைகள் படித்து வருகிறார்கள். இதில் பெண் குழந்தைகளும் அடக்கம்.

அதனால், இந்த 2 பள்ளிகளை சேர்ந்த 80 சிறுமிகளுக்கு சாப்பிடும் உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அம்மாகாண கல்வித்துறை பணிப்பாளர் மொஹமட் ரஹ்மானி கூறியதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம், அனைவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது.

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோதுதான் சிறுமிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 80 குழந்தைகளுக்கும் இவ்வளவு பெரிய தண்டனையா என்று உலக நாடுகள் அதிர்ந்து போய் கேட்டு வருகின்றன.