எகிப்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஐந்து வயது மகனைக் கத்தியால் வெட்டிக் கொன்று மகனின் தலையின் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற மகனையே கொடூரமாகக் கொன்று தின்ற இவர் 29 வயதான ஹனா மொஹமட் ஹசன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் தனது மகனைத் தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார்.

அதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார்.

மேலும் அந்த பெண் தனது மகனின் தலை மற்றும் பிற சதையை சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

உடலைத் துண்டு துண்டாக வெட்டும் வரை அந்தப் பெண் பொலிஸாரிடம் மாட்டவில்லை.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வந்துள்ளார். அங்கிருந்த வாளி ஒன்றில் உடல் உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார்.

இதையடுத்து அவர் பொலீசாருக்கு தகவல் அளித்த பிறகே இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹனா மொஹமதை கைது செய்த பொலிஸார், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் இதன் காரணமாகவே அவர் இப்படியொரு செயலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

இருப்பினும், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் மன ரீதியாகப் பாதிக்கவில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து அவரை கைது செய்து பொலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மகனைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அந்த பெண், தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

இது குறித்து ஹனா மொஹமதின் முன்னாள் கணவர் கூறுகையில், "எங்கள் இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது. இருப்பினும், என்றாவது ஒரு நாள் மீண்டும் நாங்கள் ஒரு குடும்பமாக இருப்போம் என நம்பினேன். எங்களின் ஒரு இணைப்பாக மகன் இருந்தான். அவனை அவ்வப்போது நான் சென்று சந்திப்பேன். அவர்களுக்குத் தேவையானதை அளிப்பேன். ஆனால், என்னுடன் பேசுவதால் எங்கள் மகனையும் அவர் (ஹனா) வெறுக்கத் தொடங்கினாள்.

இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தக் கொடூரத்தை அவர் செய்துள்ளார். எனது மகனின் உடலைப் பார்க்க வேண்டும் என எண்ணினேன். இருப்பினும், உடல் மிகக் கொடூரமான நிலையில் இருப்பதாகக் கூறி போலீசார் உடலைக் கூட பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டனர்" என்று கூறினார்.