இந்தியா: தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஒடிசா ரயில் விபத்து தொடர்பில் அவர் கூறியதாவது...

ஒடிசா ரயில் விபத்து உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதி நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால சூழலில் நடைபெற்றுள்ள இந்த விபத்து நடைபெற்று இருப்பது இந்திய ஆட்சி நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

விபத்துக்களை தடுக்கக் கூடிய பாதுகாப்பு கருவியை முழு அளவில் பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்க முடியும். ஆட்சியாளர்கள் மக்கள் நலன், பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை காட்டுவதை விட வெறுப்பு அரசியலை மேற்கொள்வதில்தான் அக்கறை கொண்டு இருக்கிறார்கள். ரயில்வே துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய முனைப்பு மோடி அரசுக்கு உள்ளது.

இதனால் இதுபோன்ற அலட்சியத்துடன் அவர்கள் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் இருக்கவே செய்கின்றன.

இதை புறம் தள்ள இயலவில்லை. எனவே அரசு இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். சொல்லப்போனால் பிரதமரே இதற்கு தார்மீக பொறுப்பு உடையவர். ரயில்வே துறை அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே உண்மையை கண்டறிய முடியாது.

ஆகவே, உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும், உயர்மட்ட விசாரணையை அமைக்க வேண்டும். அப்போது ரயில்வே அமைச்சர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதுதான் சரியாக இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க அதி நவீன தொழில் நுட்ப பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுக்கிறோம் என அவர் தெரிவித்தார்.