இந்தியா: தமிழ்நாடு

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தனது அமைச்சர் பதவி காரணமாக தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாது என முன்னதாக அறிவித்திருந்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் மாமன்னன் திரைப்படம்தான் தற்போதைக்கு தான் நடிக்கும் கடைசி திரைப்படம் எனவும் கூறியிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இத்திரைப்படத்தை ஜூன் 29-ல் வெளியிட முடிவு செய்துள்ளோம். இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் எது எதிர்பார்க்கப்படுகிறதோ அது கண்டிப்பாக இருக்கிறது.

கமல்ஹாசன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டோம். ஆனால் ஒரு அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு நடித்து கொண்டு இருப்பது சரியாக இருக்காது என்பதால் கைவிட்டுவிட்டோம்.

எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படம் என நினைக்கிறேன். அப்படியான ஒரு கடைசி படம் நல்ல படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அமைச்சராக இருக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த சினிமாவிலும் நடிக்கப் போவதில்லை. அதற்கு பின்னர் எப்படி என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அப்படி மீண்டும் நடித்தால் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.