இந்தியா: தமிழ்நாடு

மதுரை பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7ஆவது பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார் கூறுகையில்...

மது உடல் ஆற்றலை இழக்க செய்து மன அழுத்தத்தை உண்டாக்கி வருகிறது. பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகை உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது.

எனக்கு 69 வயது ஆகிறது. ஆனால் 25 வயது இளைஞரை போல் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அது எப்படி முடியும் என்றால் நிச்சயமாக முடியும். இதற்கான வித்தையை கற்று உள்ளேன். இதை எப்போது சொல்வேன் என்றால் என்னை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வராக்கினால் அந்த வித்தையை சொல்லித் தருகிறேன்.

தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும். தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது. அறிவு ஆற்றல் திறமை படைத்தோர் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இந்த தடுமாற்றம். மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழகம் தள்ளாடுகிறது.

மாலை நேரத்தில் வேலைக்கு பிறகு வீட்டுக்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊத சொல்லி சோதனை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. இந்தியாவில் மது இல்லாத மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம்.

மது கடைகளை மூடுங்கள் என சொல்லி ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடைக்கு போகாமலிருந்தாலே போதும்.

2026 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் அமரும் போது மது ஒழிக்கப்படும். பள்ளிச் சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.