கடந்த ஆறு மாதங்களில் ஆக்லாந்தின் Papakura உயர்நிலைப் பள்ளியில் உணவு, தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்டதை அடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 2022 மற்றும் மே 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பறியும் சார்ஜென்ட் ஆலன் நிக்சன் இது தொடர்பில் கூறுகையில், 18 வயது இளைஞன் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறினார்.

பள்ளிகள் போன்ற முக்கியமான நிறுவனங்களில் இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

திருடப்பட்ட பொருட்களில் 65 Chromebooks, தொலைக்காட்சிகள், டேப்லெட்டுகள், உணவுப் பொருட்கள் மற்றும் தொலைபேசிகள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் பள்ளி மாணவர் சமூகத்தின் கற்றலை ஆதரிக்கும் நோக்கத்தில் உள்ள முக்கியமான பொருட்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் நேற்று Papakura மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு 17 வயதாக இருந்தபோது சில கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் இளைஞர் உதவி நிறுவனத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.