இந்தியா: தமிழ்நாடு

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு மேல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.

அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி வடிவம் அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது.

இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தங்களது கைகளில் கட்டுக் கட்டாக 2 ஆயிரம் ரூபாய் மாதிரி நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டு, பாடையை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடித்து, 2000 ரூபாய் நோட்டுக்கு இறுதிச்சடங்கு நடத்தினர். அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.