இந்தியா: தமிழ்நாடு

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று பொதுமக்கள் மற்றும் உறவினர்களால் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை இயங்கி வந்தது. இந்த தாமிர உருட்டு ஆலை வெளியிட்ட நச்சு வாயு, கழிவுப் பொருட்கள் அப்பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச் சூழலை நாசமாக்கியது. அப்பகுதி நீர்வளம் மோசமாக மாசடைந்தது. இதனால் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்கள் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக உருமாறிப் போனது.

இதனால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூடக் கோரி 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2018-ல் பல்வேறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தின் உச்சமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர்.

தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மக்கள் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் அமைதி வழியில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். சிறு அசம்பாவிதங்கள் இல்லாமல் முழுமையாக அமைதி வழிப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் திடீரென போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மர்ம நபர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு தாக்கி வாகனங்களை தீக்கிரையாக்கினர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அப்போது போலீசார் முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் குறிபார்த்து அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து சுட்டுத் தள்ளினர். காக்கை குருவிகளைப் போல அப்பாவி பொதுமக்கள் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையே டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 5-வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி பாத்திமா அன்னை ஆலயம் அருகே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவ படங்களுக்கு பொதுமக்கள் இன்று தீபமேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.