திருநங்கைகளுக்கு எதிரான சர்ச்சைக்குரிய இங்கிலாந்து பெண் ஒருவர் நியூசிலாந்திற்கு நுழைய அனுமதிப்பது தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக நியூசிலாந்து குடியேற்ற திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Posie Parker என அழைக்கப்படும் Kellie-Jay Keen-Minshull, இந்த வார இறுதியில் ஆக்லாந்தில் உள்ள ஆல்பர்ட் பார்க் மற்றும் வெலிங்டனில் உள்ள சிவிக் சதுக்கத்தில் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த அவரது நிகழ்வில் கீன்-மின்ஷூலின் அவரது ஆதரவாளர்கள் நாஜி வணக்கம் செலுத்துவதையும், LGBT (lesbian, gay, bisexual, and transgender) ஆதரவாளர்களை துஷ்பிரயோகம் செய்வதையும் காண முடிந்தது.

நியூசிலாந்து குடிவரவு பொது மேலாளர் ரிச்சர்ட் ஓவன், வார இறுதியில் அவரது நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், குடிவரவு நியூசிலாந்து அவரை நியூசிலாந்துக்குள் அனுமதிப்பது தொடர்பில் மதிப்பாய்வு செய்து வருவதாக கூறினார்.

பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், இது தொடர்பில் கூறுகையில் குடியேற்ற செயல்முறை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் சுதந்திரமான பேச்சுரிமையைப் பயன்படுத்தும் மக்கள் அதை வன்முறை அல்லது வெறுக்கத்தக்க நடத்தையைத் தூண்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.

வேண்டுமென்றே பிரிவினையை உருவாக்கும் வகையில் பேச்சுரிமையைப் பயன்படுத்துபவர்களை நான் கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்தமாக சமூக ஒற்றுமைக்கு அல்லது உண்மையில் பகுத்தறிவு மற்றும் ஆக்கபூர்வமான விவாதத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எனது செய்தி என்னவென்றால்: சுதந்திரமான பேச்சுக்கான உரிமையைப் பயன்படுத்தும் எவரும், சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், வெறுக்கத்தக்க நடத்தை அல்லது வன்முறையைத் தூண்டுவதற்கு நாம் விரும்பவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - உண்மையில், அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. அதை மனதில் கொள்ளுங்கள்."

பேச்சு சுதந்திரம் என்பது உங்கள் சொந்த கருத்துக்களை அனுமதியின்றி வெளிப்படுத்தும் திறன், ஆனால் சட்டத்தில் அதற்கு வரம்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மக்களைத் தூண்டும் வகையில் பேச்சுரிமைக்கான உங்கள் உரிமைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் சிவிக் சதுக்கத்தில் கீன்-மின்ஷூல் பேரணி நடத்துவதைத் தடுக்கும் திறன் தன்னிடம் இல்லை என்று வெலிங்டன் நகர சபை கூறியது.

ஏனெனில் இது பெரும்பாலும் பேரணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொது இடமாகும்.

வெலிங்டன் மேயர் டோரி வனாவ், கீன்-மின்ஷுல்லின் கருத்துக்கள் வெலிங்டனில் வரவேற்கப்படுவதில்லை‌ என்று கூறினார்.

கீன்-மின்ஷூல் வருகை தடை செய்யப்பட வேண்டும் என்று பசுமைக் கட்சியின் வானவில் குழு குடிவரவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.