இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த நிலையில் சென்னையில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்...

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவின் கழக அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே விதி. அதேபோல் தலைமையில் உள்ளவர்களை அடிப்படை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் தலைமை தான் கிளை கழக தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்க வேண்டும் அதுதான் அதிமுகவின் சட்டவிதி.

ஆனால் எதுவும் முறைப்படி இல்லாமல், பிக் பாக்கெட் அடிப்பது போல் பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

சாதாரண தொண்டர் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற விதியை மாற்றியவர்தான் எடப்பாடி பழனிசாமி. தானும் தன்னை சுற்றியுள்ளவர்களும் பதவிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளை மாற்றியது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டில் இதுவரை எடப்பாடி பழனிசாமி போல் ஒரு உச்சபட்ச சர்வாதிகாரியை பார்த்தது இல்லை. இபிஎஸ் தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்த மாட்டார்கள், மூர்க்கத்தனமாகதான் இருப்பேன் என்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி எதிர்ப்பு அலை பாயும்.

மதுரை விமான நிலையத்தில் நிகழ்ந்தது போல் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பலை உள்ளது. அதனை அவரே உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அதிமுக தொண்டர்கள் பயப்பட வேண்டும். நாங்கள் நிச்சயம் கட்சியை மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார்.