இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தபோது வெளிநாட்டுத்தலைவர்கள் அளித்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானாவிடம் இருந்து மலிவு விலைக்கு வாங்கி, கொள்ளை விலைக்கு சட்டவிரோதமாக விற்று பெரும் லாபம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டிய வழக்கு, இஸ்லாமாபாத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது.

இந்த வழக்கில் ஆஜராகாமல் இம்ரான்கான் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால், நீதிமன்றம் அவருக்கு எதிராக அதிரடியாக பிடிவாரண்டு பிறப்பித்தது.

மேலும் பெண் நீதிபதிக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இவ்விரு வழக்குகளிலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் லாகூரில் உள்ள அவருடைய பங்களாவுக்கு போலீஸ் படை சென்றபோது, அரண்போல நின்ற இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், போலீஸ் படைக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது.

இதற்கிடையே நேற்று இம்ரான்கான் இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராவதற்கு புறப்பட்டுச்செல்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நேரத்தில் லாகூர் ஜமான் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அவரது பங்களாவுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் படையெடுத்து, தடுப்புவேலிகளை உடைத்தெறிந்து, முற்றுகையிட்டனர்.

பங்களாவினுள் நுழைந்து டஜன் கணக்கிலான அவரது ஆதரவாளர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

அப்போது இம்ரான்கான் மனைவி புஷ்ரா பீவி வீட்டில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

இதற்கிடையே இஸ்லாமாபாத் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜப்பார் இக்பால், இம்ரான் கானின் வருகையை பதிவு செய்ததுடன், அவர் மீதான பிடிவாரண்டுகளை ரத்து செய்தார்.

மேலும் இம்ரான்கான் 30 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராக அவர் உத்தரவிட்டார்.

இம்ரான்கான் வருகையால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. அங்கு போலீசாரும், இம்ரான்கான் ஆதரவாளர்களும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டினர். அங்கு கோர்ட்டு பகுதியே போர்க்களம் போல காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.