இன்று Henderson இல் இடம்பெற்ற ஒரு கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் சுடப்பட்ட குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று வைட்மாட்டா மாவட்டத் தளபதி கண்காணிப்பாளர் நைலா ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று மாலை குறித்த நபருக்கு ஆக்லாந்து மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 10 மணியளவில், Henderson Valley பெட்ரோல் நிலையத்தில் ஒரு நபர் கொள்ளையடிக்க முயன்றார் என்று கண்காணிப்பாளர் நைலா ஹாசன் இன்று மதியம் தெரிவித்தார்.

பின்னர் அந்த நபர் பெட்ரோல் பங்கை விட்டு வெளியேறினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இருப்பினும், காலை 10:30 மணியளவில் அந்த நபர் பிஎம்டபிள்யூ காரில் சம்பவ இடத்திற்குத் திரும்பி வந்து பொலிஸாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற அவரை போலீஸ் ஹெலிகாப்டர் மற்றும் பொலிஸ் வாகனங்கள் பின்தொடர்ந்தன.

இதன்போது குறித்த நபர் பலமுறை காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

அவர் குறைந்தது ஏழு முறை பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், மேலும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம், இதனையடுத்து குற்றவாளி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கண்காணிப்பாளர் ஹசன் கூறினார்.

இதனையடுத்து குற்றவாளி Henderson காவல் நிலையத்திற்குச் சென்றார். காவல்நிலையம் உடனடியாக பூட்டப்பட்டது.

அங்கு அந்த நபர் துப்பாக்கியுடன் தனது வாகனத்திலிருந்து வெளியேறினார்.

அவர் தனது ஆயுதத்தை கைவிடுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும் அவர் தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

இந்நிலையில் பொலிஸார் அவர் மீது பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்‌.

இதனையடுத்து பலத்த காயம் அடைந்த அந்த நபர் தற்போது ஆக்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குற்றவாளி 20 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர் போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களுடன்
தொடர்புடையவர் எனவும் கண்காணிப்பாளர் ஹாசன் கூறினார்.

இப்போது பல விசாரணைகள் நடந்து வருகின்றன. நடைமுறையின் ஒரு பகுதியாக சுயாதீன பொலிஸ் நடத்தை ஆணையத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.