இந்தியா: தமிழ்நாடு

முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் என அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய போது, அமைச்சர் சேகர்பாபுவால் தனக்கும் தனது உதவியாளருக்கும் இடையே நிறைய வாய் தகராறு வந்திருப்பதாகவும் வாட்ஸ் அப்பிலேயே சேகர்பாபு தன்னிடம் திகதி வாங்கிவிடுவதால் திகதி கொடுத்த தகவல் பல நேரங்களில் தனது உதவியாளருக்கே தெரியாமல் போவதாகவும் கூறினார்.

மேலும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தனக்கும் திகதி ஒதுக்கீட்டில் நிறைய பிரச்சனை இருப்பதாகவும் அவருக்கு திகதி கொடுப்பதாக நினைத்து வேறு மாவட்டச் செயலாளர்களுக்கு திகதி அனுப்பிவிட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுண்டு எனத் தெரிவிக்கிறார்.

இப்போது கூட கடந்த 3ஆம் தேதியன்று 70 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தாம் கண்டிப்பாக வந்தாக வேண்டும் என சேகர்பாபு அடம் பிடித்ததாகவும் ஆனால் தாம் 2 மாதங்களுக்கு முன்பே நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு தேதி கொடுத்திருப்பதால் அங்கு சென்றாக வேண்டும் எனக் கூறியும் அவர் கேட்கவில்லை என உதயநிதி பேசினார்.

இதற்கு காரணம் திகதி குழப்பம் தான் எனக் கூறிய அவர், இதனால் தனக்கு பதில் தனது அம்மாவை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க அனுப்பி வைத்ததாக கூறினார்.

தடுக்கி விழுந்தால் அமைச்சர் சேகர்பாபு மாவட்டத்திற்கு தான் தாம் வர வேண்டியிருப்பதாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு தன்னை அவர் அழைத்து வந்துவிடுவதாக கூறினார். சேகர்பாபுவின் உழைப்பைக் கண்டு பல நேரங்களில் தாம் வியந்துள்ளதாக தெரிவித்தார்.

நீங்கள் ஒருவர் தானா இல்லை உங்கள் உருவத்தில் அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா என பல முறை சேகர்பாபுவிடமே தாம் கேட்டிருப்பதாகவும் அந்தளவுக்கு அவரது உழைப்பு இருப்பதாகவும் எப்படி இவரால் மட்டும் முடிகிறது என ஆச்சரியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.