துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இணைந்து மொத்தம் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.

இதில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே துருக்கி இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. இந்தச் சூழலில் துருக்கியில் இப்போது மிக மோசமான புயல் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதிலும் இழப்புகள் மிக மோசமாகப் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு துருக்கியில் உள்ள இரண்டு நகரங்களின் இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகள் முழுக்க வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த பலரும் கண்டெய்னர்களில் வசித்து வந்த நிலையில் அவர்களில் பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தே வாரங்களில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.